10 April 2012

"சந்திரோதயம்"


அதிகாலை நேரம் 5,30 மணி வானொலிக் கதிர்கள் எல்லாம் திருப்பள்ளி எழுச்சி பாடிட, மஞ்சள் நிறச் சூரியனுக்கு அப்பால் வெண்ணிற மேகத்தைப் பிளந்தபடி, புஷ்ப வாகனம். அதிலிருந்து வெற்று மார்ாப்போடும், கையில் தடியோடும், வசீகரப் புன்னகையின் துணையில் இறங்கினார் காந்தியடிகள். கூடவே ஒரு தொண்டரும்.

அண்ணலே! இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாம் பூமிக்கு வந்ததன் நோக்கம் என்னவோ ?

மதுரன் நான் வாழ்ந்த பூமியிது! இதைவிட்டு நான் போனாலும், என் கொள்கைகளையும், எண்ணங்களையும் இங்கு விட்டுப் போயிருக்கிறேன். அவற்றை இந்த மக்கள் எப்படிக் கடைபிடிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே வந்திருக்கிறேன்.

நம்மை யாரும்....?!

உணர மாட்டார்கள். வா போகலாம் இருவரும் காற்றைக் கிழித்துக் கொண்டு நடக்க,,,

பொழுது சற்றே புலர்ந்தது. நெருக்கடியான சாலை வாகனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி இட்டபடி முந்திட சற்றுத் தள்ளிக் குவிந்திருந்த கூட்டத்தினுள் நுழைந்தனர் இருவரும்.

இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஒருவனைச் சுற்றி உச்சுக் கொட்டியபடியே சிலர், வேலையிருக்குப்பா? என்று நழுவினார்கள்.

இந்தாளைக் கொண்டுபோய், ஆஸ்பிட்டல்ல சேர்த்திட்டு போலீஸ் கேசுன்னு யாரு அலையறது?

சரிதான்யா பாவப்பட்டுச் சேர்த்திட்டா, நாய் மாதிரி வேலை வெட்டிய விட்டுட்டு நானில்லே போகணும். நீ வா.. நண்பனின் அதட்டலுக்கு பயந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஓடிய நண்பன்.

காந்தியடிகள் இக்காட்சியைக் கண்டு மிகவும் மனம் நொந்தார். நாட்டு மக்கள் யாரிடமும் அன்பும் கருணையும் இல்லையே என்று கவலையோடு நடந்தார். கண்ணுக்கு எதிரே ஒருவன் தன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறான். ஏதோ சாதாரண நிகழ்வினைக் காண்பதைப் போல போகிறார்களே என்று எண்ணியபடியே, ஒரு டீக்கடையின் முன் நின்றார்கள் இருவரும்.

காலைநேரம் பாய்லர் எரிந்தபடி இருக்க, ஒரே கூட்டம், நான்கு நாற்காலி நண்பர்களின் அரட்டையைக் கவனித்தார்.

ஏண்டா, அனு சிட்பண்ட் 10கோடி மோசடி பண்ணியிருக்கான் பார்த்தியா?

ஏமாறுகிறவங்க இருக்கும் வரையில் இந்த மாதிரி ஏமாத்தறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க?

உண்மைதான், அதிகமாக வட்டி, தங்கக்காசு கவர்ச்சியா ஒரு நடிகையைக் கூட்டிட்டு வந்து திறக்க வைச்சிடுங்க. உடனே கண்ணை மூடிகிட்டு பணத்தைக் கொட்ட ஆரம்பிச்சிடறாங்க.

பேண்ட் சட்டை போட்டு இங்கிலீஷ் நிஜத் திருடனுங்க இவங்க.

கரெக்ட்தாண்டா, எனக்குத் தெரிஞ்சு இந்த மூன்று வருடத்திலே எத்தனையோ பேர்! இந்த மாதிரி மோசடி நடந்துகிட்டுதான் இருக்கு, ஆனா நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்களே!?

இதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையோ? கவர்மெண்ட் என்ன செய்யறாங்க?

என்ன செய்வாங்க? எத்தனை தடவை மொட்டை அடித்தால் கூட, திரும்பவும் ஏமாறத் தயாரா இருக்காங்களே?!

எங்கு பாார்த்தாலும் ஏமாற்று வேலைதான் பிரதானம் போல அய்யா,. தொண்டர் மதுரனின் கேள்விக்குப் பதில் கூறாமல் மெளனமாய் வந்தார் மகாத்மா.

சாலைகளின் ஓரத்தில் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பொய்யான வாக்குறுதிகளை வீசியெறிந்த அரசியல்வாதிகளைப் பற்றி மக்களின் சாடல்கள். சில இடங்களில் மேடை போட்டு எதிர்க்கட்சியை விளாசித் தள்ளும் கொச்சைப் பேச்சாளர்கள். யாரும் இங்கே ஒழுங்கு இல்லை, ஆட்சிக்காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப சுரண்டிவிட்டு, ஆயுள் முடிந்தவுடன் அவசரமாய்ச் செய்த தவறை மறைக்க ஆஸ்பத்திரிகளிலும், கோர்ட் வளாகத்திலும் சுற்றும் பெரிய மனிதர்கள். தன் குற்றத்தை மறைக்க மற்றவரின் மேல் குறை சொல்லிச் சேற்றைப் பூசும் இவர்களைக் கண்டாலே பெரும் வேதனையாய் இருந்தது. நம் காலத்தில் புற்றீசல் போல ஆயிரம் கட்சிகள் தோன்றி இருந்தாலும் யாரும் மக்கள் நலன் பற்றி நினையாமல் இருந்தது. மனதிற்கு வேதனை அளிக்கிறது. வருத்தத்துடன் மகாத்மா அடுத்த வீதியை அடைந்தார்.

போலீஸ் வேன் ஒன்று இரண்டு பேரைக் கைது செய்து வேனில் ஏற்றியபடி சென்றது. வேடிக்கைப் பார்த்தவர்களில் இருவர் சம்பாஷனை மகாத்மா, தொண்டரின் காதிலும் விழுந்தது. என்னத்துக் கு இவங்க இரண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க?

போனாவாரம் நடந்த குண்டு வெடிப்பிலே 150பேர் செத்தாங்களே?! டீவியிலே கூட பரபரப்பா வந்ததே...

ஆமாம்.

அதுக்கு வெடிகுண்டு சப்ளை பண்ணவங்க இவங்க இரண்டு பேரும்தான்னு போலீஸ் கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால்தான் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போறாங்க?

இவனுங்களையெல்லாம் நிக்க வைச்சுச் சுடணும்.

இவங்க கோரிக்கைகள் நிறைவேற எத்தனை அப்பாவி உயிர்களைக் கொல்றாங்க? மனசாட்சியே கிடையாதா இவங்களுக்கு? அங்கலாய்த்தபடியே போயினர், இங்குள்ள நிலைமையைப் பார்த்தால் மனித உயிருக்கு மதிப்பே இல்லைபோல் தெரிகிறதே அய்யா...

ம்...! நான் மற்றும் எத்தனையோ தன்னலமற்ற அன்பர்கள் தங்கள் உயிரையும் துறந்து பெற்றுத் தந்த சுதந்திரம் இன்று.... வேதனையாக உள்ளது மதுரன். விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது. ஆனால் ஒளிபுக முடியாத அளவிற்கு அஞ்ஞானம் உள்ளதே?!

பஸ் ஸ்டாண்ட்டைக் கடக்கும் சமயம், ஜீன்ஸ் பேண்ட், லாங் டாப்ஸ், ஸ்லீவ்லெஸ் என்று ஆண்களும், பெண்களும் வித்தியாசமின்றி, தாய்மொழியை மறந்து ஆங்கிலத்திலேயே விளாசித் தள்ளிக் கொண்டு இருந்தனர்.

கடைசியாய்ச் சட்ட சபையின வாசலுக்குச் சென்றனர். அங்கு நடுநாயகமாய்ப் புன்னகையுடன் மகாத்மாவின் திருவுருவப்படம் சந்தன மாலையிடப்பட்டு, மின்சார விளக்கு ஒன்று எரிந்த வண்ணம் இருந்தது. ஆளுநர் வந்தவுடன் சட்டசபை துவங்கியது. அந்தந்தக் கட்சியின் ஆட்கள் கருத்தைக் கூறிட நேரம் ஒதுக்கப்பட்டது. ஓரே கூச்சல், குழப்பம், அவமதிப்பு, வெளியேறல் என்று மக்களின் நலத் திட்டத்திற்கு என்று செலவிட வேண்டிய பொன்னான நேரத்தைத் தன் சுய நலத்திற்காகப் பிறரைக் குற்றஞ்சாட்டிய வண்ணம் இருந்தது. அநதக் கூட்டம்... பாதியிலேயே தள்ளி வைக்கவும் முற்பட்டது.

மாலை மங்கிய நேரம்...

புஷ்பக விமானத்திற்கு அருகில் மதுரனும், மகாத்மாவும், தன்னலமற்ற அந்தத் தலைவரின் சோகமான முக பாவனையைப் புரிந்து கொண்ட மதுரன் கவலையோடு கேட்டார். அண்ணலே,,, எதற்கு இந்த மெளனம்? ரொம்பவும கவலையுடன் காணப்படுகிறீர்களே?

நான் இந்த பூமியை விட்டுச் சென்றாலும், என் கொள்கைகள் மூலம் நாடும், நாட்டு மக்களும் சுபீட்சமடைவார்கள் என்று இருந்தேன். ஆனால், எங்கு பார்த்தாலும் கொலை, வன்முறை, ஏமாற்று வேலை என்று ஒரே சுயநலப் பித்தர்களாய் இருப்பதும், யாரோ ஒருவரின் நலனுக்காய்த் தேவையில்லாமல் பிற உயிர்களைக் கொல்வதும் என் மனதை மிகவும் வருத்துகின்றன. மதுரன் பெருமூச்
செறிந்தார். அன்று வெள்ளையனைத் துரத்திவிட்டோம் என்று மார்த்தட்டிக் கொண்டோம். ஆனால், இன்றைய தலைமுறையினர் அந்தக் கலாச்சாரத்திலேயே ஊறித் திளைக்கின்றனர். அதில் வாழ்வதையோ பெருமையாய் இன்று நினைக்கின்றாார்கள். அன்று உயிரையும் துச்சமாய் மதித்துப் பாடுபட்ட இளைய தலைமுறையினர் எங்கே? கேளிக்கைகளும், அலட்சியப் போக்கும் கொண்ட இன்றைய தலைமுறை இளைஞர்கள் எங்கே? இல்லாத போதுதான் அதன் அருமை புரியும் என்பது போல, கேட்ட அனைத்தும் எளிதில் கிடைத்து விடுவதினால் வலிகளும், சிந்திய ரத்தமும் இவ்விளைஞர்களுகுப் புரிய மறுக்கிறது மதுரன்.

சுதந்திர பூமி எவ்வித புதிய தோரணைகளையும் கொண்டிருக்கவில்லை, காந்தியடிகள் வேதனையோடு கூறிக்கொண்டு இருந்தபோதே?! குழந்தைகளின் அணிவகுப்பைக் கண்டார்.

சுதந்திர தினத்தையொட்டிய பெரிய மனிதர்கள் போல மாறுவேடமிட்டுக் கொண்டு ஒரு பேரணி சென்றது. காந்தி, நேரு, இந்திரா, பெரியார், குமரன் என்ற சில தலைவர்களின் வேடமிட்டுக் குழந்தைகள் அணி வகுப்பு செய்தனர். அவர்களின் முன்னே, பாரதமாதா போன்று, வெள்ளை உடையில் நம் தேசியக் கொடியை ஏந்தியபடி ஒரு சிறுமி வந்தாள். கூடவே "சாரே சாஹாகே அச்சா" என்ற பாடலும், "ஜெய்ஹிந்த்" என்ற கோஷமும் ஒலித்த வண்ணம் இருந்தன. அண்ணலின் முகத்தில் புதிய ஒளி வெள்ளம் பிறந்தது.

மதுரன் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இன்றைய நிலை கட்டாயம் மாறும். எதிர்கால இந்தியா புதுமையாய்ப் பூத்துக் குலுங்கும். அன்பும், பண்பும் வளரும் என்று எனக்குள் நம்பிக்கை துளிர்விட்டு விட்டது. இனி நான் நிம்மதியாகச் செல்வேன் ! அண்ணல் புஷ்பக விமானத்தில அமர, கூடவே மதுரனும் மனநிறைவோடு ஏறிட, விமானம் புறப்பட்டு வானை நோக்கிச் சீறிப் பாய்ந்தது,

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.