10 April 2012

பல்சர்




கருப்பு நிற பல்சரைச் சுற்றித்தான் காலனி பசங்களின் கூட்டம் பதினைந்து குடும்பத்தினர் அடங்கிய சற்று பெரிய காலனி அது. எல்லாருமே நடுத்தரக் குடும்பத்தினருக்கும் சற்றே கீழுள்ளவர்கள் தான். சைக்கிளைத் தாண்டி அவர்கள் வேறெந்த இரண்டு சக்கர வாகனங்களைப் பார்த்ததில்லை, சில பேருக்கு நடைபாதை பயணம் மட்டுமே, வறுமை குடுத்தனம் நடத்தும் காலனி அது?! 

சுல்தான் பாய் தான் முதன் முதலில் பல்சர் வாங்கி இறக்கியுள்ளார். அவரும் அலுவலகம் ஒன்றில் கிளார்க்காக பணிபுரிந்தவர், தற்போது அவருக்கு மானேஜர் பதவி கிடைத்துள்ளதால் சைக்கிளில் சென்று வந்தால் கெளரவாக இராது என்று ஆபீஸ்ஸில் லோன் போட்டு பல்சர் வண்டியை வாங்கினார். மற்ற பணிகள் எப்படியோ வண்டியை தினமும் துடைப்பதும், கழுவுவதும், என ஒரு தூசி துரும்பு பட விடமாட்டார், 

ஒருமுறையாவது அந்த வண்டியை ஓட்டிப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மிகுந்து போய் இருந்த அந்த காலனி இளசுகளிடையே?

அதில் ஒருவன் தான் அரவிந்தன். அவனிடம் இருந்த ஓட்டை சைக்கிளிலேயே கைவிட்டபடி வெகு வேகமாய் சில சாகசங்களுடன் ஓட்டக் கூடியவன். அப்படிப் பட்டவனின் கவனம் சுல்தான் பாயின் பல்சரின் மேல் படிந்தது. இலேசாய் முகத்தில் அரும்பிய பூனை மீசை போன்ற ரோமங்கள் ஒரு திமிரைத் தோற்றுவித்தது. அவனின் உடலில், இளங்கன்று பயமறியாது அல்லவா? அவனுக்கும் சுல்தான் பாயின் பைக்கின் மேல் காதல் பிறந்தது. ஒரு ஞாயிறு காலனியில் உள்ள சிறுவர்கள் எல்லாரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது கூட, போர்வீரக் குதிரையைப் போயிருக்கும் அந்த பல்சர்தான்.

நன்றாக மினுமினுவென்று அதன் கருமை நிறம் வெயிலில் பட்டு மினுமினுத்தது, 

போனா அந்த வண்டியிலே போகனுன்டா? சும்மா குதிரை மாதிரி, 

ம்கூம்... அது சுல்தான் பாய் வண்டி அதன் பக்கம் நாமெல்லாம் நெருங்கக் கூட முடியாது, அவராவது தர்றதாவது, 

பேசாம நம்ம வீட்லே இதே போல வாங்கச் சொல்லாமா?

அதோட விலை எவ்வளவுடா இருக்கும்?

ஐம்பதுக்கும் மேல இருக்குமாம், அதுக்கு நாம எங்கே போறது?

கரெக்டுதான்?! ஆனா ஆசையா இருக்கேடா?

சுல்தான் பாய்க்கு தெரிஞ்சா தோலை உரிச்சிடுவாரு? பாபு சொல்ல எப்படியாவது செய்தே தீருவேன்னு மனதிற்குள் வன்மம் வளர்த்தபடி அலைந்தான் அரவிந்தன்.

அன்றைய காலைப்பொழுது, சுல்தான் பாய்க்கு சற்றே மோசமாகத்தான் விடிந்தது, காலையில் கீழே கொட்டியிருந்த எண்ணெய்யில் வழுக்கி விழுந்து, கால் எலும்பு சுலுக்கி கட்டுபோட்டு நடக்க இயலாமல் இருந்தார். ஆனாலும், வாசலில் சேர் போட்டு அமர்ந்தபடியே பல்சரை யாரும் தொடவிடாதபடி, 

அதையென்ன நாயா தூக்கிட்டுப் போகப் போகுது? எப்போ பார்த்தாலும் அதுக்கே காவல் இருக்கீயளே? கட்டின பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட இப்படி பார்த்துக்கிட்டது இல்லை, சாப்பிடாம தூங்காம என்ன பழக்கமோ? மனைவி முகவாயில் இடித்தபடி உள்ளே சென்றாள். 

பல்சர் மூன்று நாட்களாக துடைக்காமல் தூசி படிந்து போய் இருந்தது, அரவிந்தன் அங்கு ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் பஞ்சோடு வந்தான். பல்சரை துடைக்க துவங்கினான். வழக்கமாய் தொடக் கூட அனுமதிக்காத சுல்தான் பாய் இன்று அரவிந்தனைத் தடுக்கவில்லை, அன்றிலிருந்தது தினசரி பல்சரைத் துடைப்பது அவனின் வேலையாகிப் போனது, 

பரவாயில்லைடா சொன்னமாதிரியே நம்ம அரவிந்தன் சாதிச்சிட்டான். சுல்தான் பாய் வண்டியைத் தொடக்கூட விடமாட்டார் இப்போ அரவிந்தனை ஒன்றும் சொல்லவில்லையே?

போடா, ஓட்டவா செய்திட்டான் சும்மா துடைக்கிறது தானே அதுக்குப் போய் பெரிசா அலட்டிக்கிறாயே

அரவிந்தன் நினைச்சா அதுவும் செய்வான்டா, மார்த்தட்டிக்கொண்ட நண்பர்களுக்காகவாது, கட்டாயம் ஓட்டியே தீர வேண்டும்.

ஒரு வழியாய் சுல்தான் பாயின் அபிப்ராயத்தைப் பெற்றாகிவிட்டது. பத்து நாட்களில் அவரும் நடக்கத் துவங்கி மறுபடியும் பல்சரை ஒட்ட ஆரம்பித்தாலும் அரவிந்தனால் பின்னால் உட்கார்ந்து போக முடிந்தது. 
ஒரு நாள் பயம் விட்டுக் கேட்டே விட்டான் நேரடியாய்? பாய் ஒரு நாள் எனக்கு வண்டி ஓட்ட ஆசையாய் இருக்கு என்றான். 

என்னடா அரவிந்தா விளையாடுறீயா? இந்த வண்டியோட விலை உனக்குத் தெரியுமா? ஒரு ரூபா இரண்டு ரூபா இல்லை, உனக்கு இப்போ சின்ன வயசு என்னதான் நீ நல்லா சைக்கிள் ஓட்டினாலும் உனக்கு பேலன்ஸ் வராது, அப்படியே வண்டிக்கு ஏதுனா ஆனாலும், காசுதான் செலவாகும், ஆனா உனக்கு அடிகிடி பட்டுட்டா உங்கம்மா உங்கப்பாவிற்கு யாரு பதில் சொல்றது? என்று நாசூக்காக மறுத்துவிட்டார்.

பிறகு, ஒரு சில நாட்கள் கழித்து அரவிந்தனை வழக்கம் போல் ஸ்டாண்டு போட்டு நிறுத்தச் சொன்னார், சுல்தான் பாய், அப்போது தான் அரவிந்தன் உடனே சட்டென வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு அடித்து விடலாம் என்று தோன்றிய எண்ணத்தை செயல்படுத்தினான். வண்டியை வேகப்படுத்தினான்.

டேய் அரவிந்தன் வண்டியை ஓட்றான், சூப்பர்டா அரவிந்தா இன்னும் வேகமா போடா என்று நண்பர்களின் ஆரவாரக் குரல் பின்னால இருந்து கேட்டது அவன் உடம்பில் புது வேகம் பிறந்தது, கைகளை எடுத்து விட்டு வண்டியை ஓட்டினான். எப்படிடா என்று நண்பர்களிடம் கேட்டான். அதுதான் தெரியும், நிலை தடுமாறியது, 
வண்டி தடம் புரண்டது, அரவிந்தன் தூக்கிவீசப்பட்டான். தலையிலிருந்து ஏதோ சூடாக வழிந்தது. 

அரவிந்தன் கண்விழித்தபோது, அம்மா டாக்டரிடம் அழுது கொண்டிருந்தாள். அம்மா உங்க பையனுக்கு தலையில் அடிபட்டு இருக்கு, காலில் பலத்த அடி அவர் நடக்க எப்படியும் ஆறுமாதம் ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தார், அம்மா கதறினாள். தூரத்தில் ஒரு புள்ளியாய் சுல்தான் பாய் கண்களை மூடிக்கொண்டான். 
கண்ணோரம் ஈரமாய்.....! வேண்டியதுதான் தனக்கு இந்த தண்டனை என்று புரிந்தது.

கண்களில் பத்துநாட்கள் நடக்க முடியாமல் இருந்த சுல்தான் பாய் நினைவுக்கு வந்தார், கூடவே அவர் விழ காரணமாய் இருந்த எண்ணெய் பாட்டில் இன்னமும் அவன் அலமாரியில் இருப்பதும் !

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.