10 January 2013

அவள்

நான் தினந்தோறும் சாலையோரத்தில் அவளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். ஜனசந்தடிக்கு சற்றும் குறைவில்லாத எங்கள் வீட்டுத் தெருவோரத்தின் பிளாட்பார்ம்கள் அனைத்தையும் குத்தகைக்கு எடுத்தவள்போல் எப்போதுமே அவள் வாசம் செய்வது அங்குதான். பழைய பிளாஸ்டிக் பையிலான மூட்டைகள் அவளைச் சுற்றி எப்போதும் இருக்கும். அதில் ஏதாவது வைத்திருப்பாள். அவையெல்லாமே நம்மைப் போன்ற மனிதர்களுக்கு குப்பைகளாகத் தெரியும் அவளைப் பொறுத்தவரையில் அவையெல்லாமே விலை மதிப்பில்லாதவைகளாகத்தான் தோன்றும்.

நாய் பூனை இவற்றோடேயே அவள் காலத்தைக் கழித்து வந்தாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்கு 38 வயதிருக்கும். நல்ல திடகாத்திரமான உடல்வாகு, கோதுமை நிறம் எப்போதாவது ஒருமுறை அவளுக்கேத் தோணும் போது சிக்குண்ட போதிலும் அதை தூக்கிக்கட்டி அதில் பல கைக்குக் கிடைக்கும் பழைய கிளிப்புகளை குத்தியிருப்பாள். அதிகம் கிழியாத ஒரு உடை, சில நேரங்களில் மேலாடை கூட அவள் மடியில் தவழ்ந்து கொண்டு இருக்கும். பார்ப்போரின் கண்களுக்குத் தன் உடல் விருந்தாகிறதே என்று அவள் உணரவில்லை போலும். அந்த தெரு குழந்தைகளுக்கு அவள் ஒரு பைத்தியம். அய் . ..பைத்தியம் என்று கல்கொண்டு எரிவார்கள். அந்தக் கல் பட்டு கன்றிச்சிவந்திட்ட தன் உடலைப் பார்த்து அழுவாளேத் தவிர ஒருபோதும் கல் எரிந்த குழந்தைகளை துன்புறுத்திடமாட்டாள். சிலநேரம் ஆகாசத்தைப் பார்த்து கையிலிருக்கும் ஒரு மூட்டையை தலைக்கு அண்டைக் கொடுத்து வெறிப்பாள். அப்போது அவள் கண்களில் இருந்து நீர் தன்னால் பிரவாகம் எடுக்கும் இத்தனை தூரம் அவளைப்பற்றிச் சொல்கிறேனே நான் யார் என்ற எண்ணம் தானே உங்களுக்கு....!

என் பெயர் ரகுராமன் அவள் தன் படுக்கையறையாய் நினைத்திருக்கும் பிளாட்பாமிற்கு எதிர் வீட்டுக்காரன், ச்சே ஆம்பிள்ளைங்க வெளியே தெருவே போகும்போது எல்லாத்தையும் காட்டிகிட்டு என்ன ஜென்மமோ ? போகும் போது அவ முகத்திலே முழிச்சிட்டுப் போகாதீங்க என்று அங்கலாய்க்கும் மனைவியின் மூலம் தான் நான் அவளை முதன் முதல் கண்டது, யார் தீபா ?

ம்...எனக்கென்னங்க தெரியும். ஒருவாரமா இதே தெருவிலேதான் சுத்திகிட்டு இருந்தா இன்னைக்கு இங்கே வந்து உட்கார்ந்திட்டு இருக்கா. போறவங்க வர்றவங்க எல்லாம் பார்க்கிறாங்களேத் தவிர்த்து யாரும் ஒரு வார்தை யாரு என்னன்னு கேட்கலை.

பாவம் பைத்தியம் போல இருக்கு... சாப்பிட ஏதாவது தாயேன்.

போதுமே உங்க சமர்த்து, ஆபீஸ்லேயிருந்து வீட்டுக்கு வரும்போதே கை ரிமோட்டைத் தேடுதே டீவியில் என்ன காட்டுறாங்களாம். இந்த மாதிரி மனநிலை பிறண்டவங்க மாதிரி நடிச்சுக் கூட மோசடி, திருட்டு நடக்குதாம். எனக்கென்னவோ அவளைப் பார்த்தாளே பத்திகிட்டு வர்றது. நீங்க போங்க, என்று நான் செல்லும் வரையில் நின்று பார்த்துவிட்டுப்போனாள் தீபா. அன்றிலிருந்து அவள் பார்வைக்குரியவள் ஆகிவிட்டான். காலையில் காபி எடுத்துக்கொண்டு பால்கனியில் நின்றபடியே அவளின் செய்கைகளை கண்காணிக்கும் ஒருவனாகிப்போனேன் நான். என்னால் எத்தனை முயன்றும் அதை மாற்றிக்கொள்ள இயலவில்லை. என்னதான் பைத்தியம் என்றாலும் உருவத்தில் ஒரு நேர்த்தி இருக்கும். நன்றாய் வாழ்ந்து கெட்டவள் போலிருக்கிறது என்ற நினைப்பு தோன்றும்.

சில விடலைப் பையன்களும் அந்த ஏரியா மைனர்களும் அவளைச் சுற்றி சுற்றி  வரும்போதும், அசிங்கமான வார்த்தைகளால் அவளை இம்சிக்கும் போதும் மனம் கனக்கும். ஆனால், எதிர்த்து கேட்டிடத் தோன்றாது, அத்தோடு தீபாவிற்கும் அது இஷ்டமில்லை, எவனோ என்னமோ கேட்டுட்டுப் போறான். நீங்க யாரு அவளுக்கு வக்காலத்து வாங்க. அக்கம் பக்கத்து ஜனங்கதான் ஒரு அவசரத்துக்கு வருவாங்க அவங்களைப் பகைத்துக் கொள்ளாதீங்க என்பாள். சென்னையில் பக்கத்து வீடு எரிந்தால் கூட மற்றவர்களைப் பொறுத்தவரையில் வீடு, கணவன், பிள்ளைகள், சீரியல், எதிர்வீட்டு பக்கத்துவீட்டு பெண்களுடன் வம்பு என்று சராசரி மனைவியாகவே வாழ்த்து கொண்டு இருப்பவள். அதனால் தீபாவின் நிம்மதியைக் கெடுக்கவும் எனக்கு மனமில்லை, நானும் இதே சென்னைவாசிதானே, அடுத்தவீட்டு நெருப்பு என் வீட்டில் பிடிக்காதவரை நிம்மதியே என்று வாழ்பவனாயிற்றே ?

தீபா தன் சொந்த ஊருக்குப் போயிருந்தாள். நான் தெருமுனையில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். வழக்கம் போல் அங்கே எங்கோ எடுத்து வந்திருந்த பழைய நெளிந்த வளையல்களை ஒவ்வொன்றாய் தன் கைகளுக்குள் திணித்து அழகு பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள், கைநிறைய அடுக்கிவிட்டு கையை மேலே உயர்த்தியும், கீழே இறக்கியும் அதில் எழும் சப்தங்களைக் கண்டு புன்னகை செய்யும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன் நான். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடுமென எழுந்தவள் நேராக என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். உறுத்துப் பார்த்துவிட்டு, மாமா எனக்கு டீயும் பண்ணும் வாங்கித்தர்றீயா ? என்றாள்.

மாமா என்று அவள் என்னை அழைத்ததும், சுற்றியிருந்தவர்களின் பார்வை என்மேல் விழுந்த சங்கோஜத்தில் டீக்கடைக்காரரிடம் பணத்தைக் கொடுத்து அவள் கேட்பதைத் தரச் சொன்னேன்.

ஏய்.... என்னையெல்லாம் பார்த்தா மாமான்னு தெரியலையா ? வர்றீயா நான் பிரியாணி வாங்கித்தர்றேன் என்று அங்கிருந்த ஒருவன் அவளிடம் நெருங்கினான் அசிங்கமாய் இளித்தபடி,

சார், விடுங்க அதுவே, மனநிலை சரியில்லாத பொண்ணு அதைப்போய் கிண்டல் செய்யலாமா ? எப்போதுமே நம்மை விட சக்தியில் குறைந்தவர்களை நாம் ஏளனம் செய்யக்கூடாது, என்று அவனுக்கு அறிவுரை கூறிய என்னை பார்த்த பார்வையில் குரோதம் இருந்தது.

வந்தாள் என்ன மாமா என்ற கேள்வியோடு ?

அண்ணான்னு சொல்லு, உன் பெயர் என்னன்னு தெரியுமா ?

ஒ...நானு பவுனு அம்மா அப்படித்தான் கூப்பிடும் என்றாள் கள்ளங்கபடமில்லாமல்.

நீ யாரு ? எங்கேயிருந்து வந்திருக்கே உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா, என்று அடுக்கடுக்காய் கேள்வி கேட்டுவிட்டு அவள் முகம் போன போக்கைப் பார்த்ததும் அமைதியாகிவிட்டேன் நான். அதுவரையில் அவள் முகத்தில் இருந்து அமைதி எங்கே போனதென்றே தெரியவில்லை, கல்யாணம் கணவன் என்ற கேள்விகளா, எங்கேயிருந்து வருகிறாய் என்று கேட்டதோ எது அவளைக் கோப்படுத்தியதோ நான் வாங்கித்தந்த டீயினை என் மேலேயே கொட்டி அபிஷேகம் செய்து விட்டு பண்ணையும் முகத்தில் வீசி போய்விட்டாள், டீக்கடைக்காரர் வேகமாய் ஓடி வந்தார்.

அட நீங்க ஏன் ஸார் அந்த பைத்தியத்திற்கிட்டே போய் பேசினீங்க, முட்டாள்தனமா இப்படிப் பண்ணிட்டு போயிடுச்சு சூடா சுடுதண்ணியை எடுத்து ஊத்தினா கொஞ்சம் பயம் இருக்கும்

வேண்டாம் பாவம் நான் அவளுக்காக பரிந்து பேசியதையே புரிந்து கொள்ள முடியாதவளைப் போய் அடித்து துன்புறுத்தி என்ன பயன் ? பார்க்க நல்ல பெண்ணாத் தெரியுறா ? இந்த மாதிரி இருப்பது நல்லாயில்லை, நான் நம்ம ஏரியா இன்ஸ்பெக்டரைப் பார்த்துச் சொல்றேன், என்றபடியே அங்கிருந்து
நகர்ந்தேன்.

சொன்னபடியே இன்ஸ்பெக்டரையும் பார்த்துப் பேசினேன். இந்த மாதிரி ஒவ்வொரு ஏரியாவிலேயும் இருக்காங்க, நாங்களும் பார்த்து இரண்டு நாள் வச்சிருந்து உரிய இடத்திற்கு அனுப்பினாலும் எப்படியும் திருப்பி இந்த மாதிரி வந்திடறாங்க. விடுங்க ஸார் இரண்டு நாள் இருந்துட்டு அவளே போயிடுவா, இன்ஸ்பெக்டர் அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். வேற வேலையில்லை இருக்கிற கேசு பத்ததாதுன்னு பைத்தியத்தை வேற நம்ம தலையிலே கட்டப் பாக்குறாங்க, எதுக்கெடுத்தாலும் போலீசுக்கு வந்திடறாங்க.

அன்றிரவு... கரண்ட் கட்டாயிருந்தது, காற்றுக்காக ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுப் படுத்தேன். விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது. திடுமென ஏதோ சப்தம், முனகலா ? அலறலா தெரியவில்லை, ஏதோ ஓலமிடுவதைப் போல் என்னவாக இருக்கும் என்ற நினைப்பில் பால்கனிக் கதவை திறந்து எட்டிப்பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சி உறைய வைத்தது. ஒரு காமுகன் அவன் முகம் அவ்வளவாக தெரியவில்லை, அவளை அவளை....கடவுளே அவளின் அலறல் பலவீனமாகிக் கொண்டே வந்தது.

ஏய்...யாரது ? என்று ஒரு குரல் கொடுத்தான் அந்த மிருகம் அவளை விட்டு விலகியது. விடிவது போல் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கொட்டிக்கொண்டு இருக்க பவுனு மட்டும் அசையாமல் படுத்திருந்தாள் உடலில் துணியில்லாமல் எழுந்திருக்கக்கூட முடியவில்லை போலும் அவளால், உள்ளே வந்து பீரோவைத் திறந்தேன். குளித்துவிட்டு வந்திருந்த தீபா என்னை ஒருமாதிரி பார்த்தாள். என்னங்க இது சீக்கிரம் எழுந்திட்டீங்க என்ற அவள் கேள்வியை அலட்சியப்படுத்திவிட்டு அவளின் புடவையோடு விரைந்தேன். கீழே கிடந்த பவுனிற்கு சுற்றிவிட்டேன். அவள் என்னை மூர்க்கமாய் எதிர்த்தாள். தன் நகங்களைக் கொண்டு என் முகத்தில் கீறினாள். அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு மாடியேறினேன். எதிர்ப்பட்ட தீபா கேள்விக்குறியாய்ப் பார்த்தாள்.

என்னாச்சு ?

யாரோ ஒருத்தன் அவளை,,,, விடியப்போகுது அதனால்தான். ... தீபாவிற்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒண்ணும் பேசாமல் நகர்ந்து விட்டாள். வழக்கம் போல் அலுவலகம் கிளம்பும் போது பவுனைப் பார்த்தேன். மறுபடியும் அதே வெறித்தப் பார்வையோடு அமர்ந்திருந்தாள். எனக்குள் உறுத்தலாக இருந்தது. எதிர்ப்பட்ட ஒவ்வொருவரையும் இவனத இவனா என்று கேட்கத் தோன்றியது. ச்சே தன்னையே யார் என்று உணராத ஒரு பெண்ணைப் போய் அவளின் உடலை எடுத்துக்கொண்டு இருக்கிறானே....எத்தனை கீழ்பிறவியாக அவன் இருந்திருக்க வேண்டும் என்று என்னை எத்தனை முறைத் தேற்றியும் கோபத்தைக் கட்டுப்படுத்திட முடியவில்லை, அன்றிலிருந்து இரவில் அவ்வப்போது எழுந்து பால்கனிப்பக்கம் பார்வையை வீசுவதை வழக்கமாய்க் கொண்டு இருந்தேன். தீபாவிற்கும் என் உணர்வுகள் புரிந்ததோ என்னவோ ஏதும் சொல்லவில்லை அவள். ஆனால், பார்வையில் மட்டும் ஏதோ ஒரு கேள்வி ஒட்டிக்கொண்டிருப்பதைப் போல தோன்றும்.

நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் தீபா இன்னைக்கு தெருவுலே ஒரே பிரச்சனை என்றாள்.

என்ன பிரச்சனை ?

உங்க ஹீரோயின் அதுதான் அந்த பவுனு மதியானம் கீழே விழுந்து கிடந்தா பார்க்கப் பாவமாய் இருந்தது. தண்ணீ தெளிச்சு தெருமுனையில் இருக்கிற சங்கரி நர்ஸ் வந்து பார்த்தாங்க அவ மாசமா இருக்களாம், திகைப்புடன் திருப்பிப் பார்த்தேன் நான். அந்த க் கருப்புநாள் என் நினைவில் வந்தது.

அப்படியா.... இந்த நிலைமையிலே அவளுக்கு இது தேவையா தீபு, பேசாம போய் கலைச்சிட்டு வந்திடுவோமா, என்னையும் பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல் பார்த்தாள் தீபா.

ஏங்க சும்மாவே அன்னைக்கு என் புடவையை நீங்க போர்த்திட்டு வந்தீங்க, அதுக்கே அக்கம் பக்கத்திற்கு எல்லாம் பதில் சொல் வேண்டியது இருந்தது. இதெல்லாம் போதாதுன்னு அவ உங்களைப் பார்த்தாளே மாமா மாமான்னு கூப்பிட்டு உயிரை வாங்குறா. இப்போ நானோ நீங்களோ அவளுக்கு அபார்ஷன் செய்யக் கூட்டிட்டு போனா, பார்க்கிறவங்க தப்பா நினைக்கமாட்டாங்க.

தீபாவின் கோணம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் பவுனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோணியது. அதுக்கு மேல் தீபாவிடம் பேசுவதும் தப்பாகவே தோன்றியது எனக்கு. பிறருக்கு வருவதாக தோன்றும் சந்தேகம் தீபாவுக்கே வந்துவிட்டால் என் நிலைமை மோசாமாகிவிடுமே ? இப்படித்தான் நம்மில் பலர் சந்தோஷம், துக்கம் என உணர்வுகளின் வெளிப்பாடு எல்லாத்தையும் பிறருக்காக விட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் தீபா தினமும் மதிய வேளை மட்டும் பவுனிற்கு உணவளிக்கத் தொடங்கினாள்.

தினமும் மசக்கையில் அவள் சுருண்டு கிடப்பதையும், சிலநேரம் எழுந்து போகிற வருகிறவர்களைப் பார்த்து சிரிப்பதையும் கண்டபடியே செல்லுவேன். அன்று கை நிறைய கண்ணாடி வளையல்களைப் போட்டு இருந்தாள் நான் அந்தப் பக்கம் கடக்கும்போது மாமா....பார்த்தீயா என்று வளையல்களைக் குலுக்கிக் காண்பித்தாள். குழந்தையாய் இருக்கும் அவளின் நிலைமை என்னவாகும் என்று என்னுள் முள்ளாய் குத்திக்கொண்டு இருந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.

அலுவலக வேலை விஷயமாக எனக்கு வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஏங்க போகும் போது அவளைப் பார்த்துட்டுப் போங்க நிறையமாச கர்ப்பிணி எதிர்க்க வந்தா ரொம்ப நல்லது என்ற தீபாவைக் காண வியப்பாய் இருந்ததெனக்கு. இவள்தானே அன்று பவுனின் மூஞ்சியில் முழிக்காதீங்க என்று சொன்னாள். காலமும் நேரமும் எல்லாரையும் மாற்றிவிடுகிறதே, நேற்று அபசகுணமாய்த் தோன்றியது, இன்று சுபமாய் நல்ல சகுணமாய் தெரிகிறதே என்று நினைத்தபடியே கிளம்பினேன்.

மூன்று நாட்கள் கழித்து நான் அங்கே வந்த போது, தெருவே கூட்டமாய் இருந்தது, என்னாச்சு என்று வேகமாய் உள்ளே நுழைந்துப் பார்த்தேன். பவுனு சுவரோரம் சாய்தபடி அமர்ந்திருந்தாள். உதிரம் சூழ்ந்திருந்தது அவளைச் சுற்றிலும், அருகிலே குாந்தை கண்மூடிக் கிடந்தது, சர்வ சாதாரணமாய் ஈக்கள் அதை மொய்த்தன. அதனிடம் எந்த அசைவும் இல்லை, தீபா நின்றிருந்தவள் என்னை நோக்கி வந்தாள்.

என்னாச்சு தீபா....

அவளுக்கு நைட் பிரசவ வலி வந்திருக்கும் போல, இரவு நேரம் வேறு, குழந்தை இறந்தே பொறந்திருக்கு. பைத்தியமா இருந்தாலும் எத்தனை தாய் பாசம் பாாத்தீங்களா. ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கு மட்டுமில்லை உணர்வுகள் மறந்த நிலையில உள்ள இவளுக்கு கூட தாய்மை உணர்வு இருக்கு. அவ அழறதைப் பார்க்கவே முடியலைங்க. இவளுக்கும் நிறைய உதிரப்போக்கு ஏற்பட்டு இருக்கு சீக்கிரம் ஆம்புலன்ஸீக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் அமைதியாய் அவளைப் பார்த்தேன். என்ன பாக்குறீங்க நான்தான் சொல்றேன். இப்போ யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை, உயிர் முக்கியமிங்க, அந்த குழந்தையை அதனோட அசைவை எல்லாமே அவ உணர்ந்திருப்பா அதனாலதான் இன்னைக்கு அது இழந்ததை அவளால தாங்கிக்க முடியலை. தீபாவின் கண்களில் கண்ணீர்

நான் ஆம்புலன்ஸிற்குப் போன் செய்தேன். அவர்கள் வந்து இறந்த குழந்தையையும் அவளையும் வேனில் ஏற்றினார்கள். பவுனைப் பார்த்தேன். அழுகையோடு என்னைப் பார்த்தாள். நீ ஏன் என்னைவிட்டுப் போனே என்று கேள்வி கேட்பதைப் போல் இருந்தது. அவளின் கை அடிவயிற்றைத் தடவியது. வழக்கம் போல் மெளனமாய் நின்றேன் நான். ஏனோ இன்றளவும் அவள் என் மனதை விட்டு அகலவில்லை, அதன்பிறகு, அவளை அந்தத் தெருவில் நான் பார்க்கவில்லை, அவள் விட்டுச்சென்ற எச்சமாய், சில பல மூட்டைகளும் கூட இப்போது காணாமல் போயிருந்தது. அந்த பிளாட்பாரம் அரியணை தன் ராணியை பறிகொடுத்துப் பாவமாய் நின்றது, கிட்டத்தட்ட எல்லாரும் அவளை செய்தியாக்கிப் பேசி பேசியே ஓய்ந்து மறந்து போய் இருந்தார்கள். என் மனம் மட்டும் அந்தப் பாவப்பட்ட பெண்ணின் நினைவுகளோடு என் பால்கனிக் கதவுகளைப் போல் மூடியே இருந்தது.

3 comments:

சீராளன்.வீ said...

உள்மனதில் உதிரம் சொட்டும் கதை லதா ,இது கதையாவே இருக்கக் கூடாதா .என்று மனம் ஏங்கினாலும் எங்கேயும் எப்போதும் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகி விடுகிறது ..மக்களும் ,மாக்களும் நிறைந்த சமூகத்தில் இன்னும் ஈரமாய் சில உணர்வுகள்

Anonymous said...

It,s very nice. But, U need some depth portray. All the best ... ur face book friend Sakthi (Vatham Short film Director)

sornamithran said...

உண்மையிலேயே கதை மனதை தொட்டது.நடையும் அருமை.http://sornamithran.blogspot.com

Powered By Blogger
Powered by Blogger.