கண்ணீரின் சுவடுகள் கன்னப்பாதையில்! கவலையின் சுவடுகள் இதயப்பாதையில்! நாட்கள் நகர்ந்தாலும் நினைவின் ஓரம் நெஞ்சைப் பிழிவதைப்போல் என் மனமெங்கும் இன்பத்தினை விதைக்கத்தான் உனை நினைத்தேன். வெற்றுப்பக்கமாய் இருந்த மனம் ஒரு முழு நீள ஓவியமாய் உன் முகத்தை நிறைத்திருந்தது.

மனதை அழுத்திய சுமைகள் உனைக் கண்டதும் சற்றே மறைந்தது. நான் உனைக் காணத் துடிக்கிறேன். நீ ஒரு புரியாத ஓவியம். நேசிப்பினை விழிகள் சொல்கிறது. வார்த்தைகள் வெறுப்பினைக் கொட்டுகிறது. தவிப்பாய் காத்திருக்கிறாய். அருகில் வந்ததும் அனலாய்த் திரும்புகிறாய். உன் மனதில் எழும் எண்ணங்களை என்னால் உணரவே முடியவில்லை. ஆசையாய் காதலாய் வருடிய விழிகளே, உனக்கு என்ன ஆனது? இனிய கற்பனையை இதயத்திற்குள் விதைத்தவனே, மீண்டும் உன் கதவடைப்பினைத் தாங்கும் சக்தி இல்லை என்னிடம்! எத்தனை முத்தங்கள் உயிர்ப்பூட்டைத் திறந்து என்னை முழுவதுமாய் எடுத்துக்கொள்ள நீ தந்த பரிசுகள்.

உன் நினைவின் தாக்கம், நிலவிலும், வானிலும், மின்னும் ஒளியாய், நீ என்னால் பிரகாசிக்கிறாய். உன் நினைவுப் புள்ளிகளை ஒன்றாய் இட்டு என் எண்ணங்களால் அதை ஒன்று சேர்க்கத் தோன்றியது உன் அழகிய உருவம்! இருள் படர்ந்த வானில் ஆங்காங்கே வெண்திட்டுக்களாய் மேகங்கள்! அலையலையாய் பொங்கும் உன் நினைவுகளே உருவமெடுத்தாற்போல் ஓர் எண்ணம்! மணப்பெண்ணாய் புத்தொளி வீசி பூர்ணமாய் ஆடையில்லா அழகிய நிலவு!

அதில் நீயும் நானும்... உலகை மறந்து, உணர்வுகளைத் துறந்து நம் இருவர் கைகளும் ஒன்றோடு ஒன்று கட்டுண்டு இருக்கிறது. எண்ணப் படிக்கட்டுகள் மெல்ல மெல்ல விரிந்து, இதய மாளிகைக்குள் எனை அழைக்கிறாய். சில்லென்ற ஊதக்காற்று உன் வாசம் மூலமாய் நீ வந்துவிட்டுப் போனதை உணர்த்திட, பூஞ்சாரலாய் மழைத்தூறலில் நனைகிறேன் நான்! எங்கே நீ, விநாடிகளாய் விரயமாகும் தருணங்களைத் தரப்போகிறாய் என்பதை அறிவிக்கத்தான் இதமான உன் அணைப்பைத் தந்தாயா? உடைந்த இதயம் உன்னைத் தொலைத்துவிட்டேன் என்று இரத்த அழுகையில் கண்ணீர் பொழிவது உணர முடியவில்லையா?

ஒவ்வொரு விடியலிலும் உனைக்கண்டேன் என் கனவில்! ஒவ்வொரு இரவும் மூடிய விழிகளுக்குள் உருவமாய் நீ வருவாய் என் நினைவில்! என்ன என் இதயம் தங்கமாய் ஜொலிக்கிறது. நீ அதில் இருப்பதனாலா? நீ காதலை உணர்த்தினாய் உன் விழிகளில்! ஆசையை உணர்த்தினாய் வருடலில்! அன்பை உணர்த்தினாய் உன் அணைப்பில்!

ஊமையாய் அழுகின்றன விழிகள். சிந்திக்க மனமற்று மறதியை மகிழ்வாய் ஏற்றுக்கொள்கிறது மூளை. உன் நினைவென்னும் போர்வையில், உறங்கிக் கிடக்கவே இதயம் ஏங்குகிறது. பாறையாய் இருகிக் கிடந்த இதயத்தை இளக்கினாய், உன் உதடு விரிக்காத புன்னகையால்! குடையாய் வளைந்திருக்கும் இமைக்குள் மழையாய் உன் நினைவலைகள். எண்ணற்ற எண்ணக் கடலுக்குள் கப்பலாய் நங்கூரமிட்டாய். ஒவ்வொரு நொடியையும் உனை எண்ணியே கழிக்க வைத்தாய்.

காயங்களில் கதறிய இதயத்தை வார்த்தைகளின் சூட்டினால் ஆறுதல்படுத்தினாய். இன்று நீயே காயப்படுத்தலாமா? எத்தனை எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டோம். உன் விழிகள் எனைத் தொட்டுப் போகும்போதெல்லாம் எழுப்பிச்சென்ற கேள்விகளுக்கு விடை தெரிவிக்கவே இந்த மெளனமா? உனை மறக்கத்தான் முயல்கிறேன்... ஆனால், முன்பைவிடவும் அதிகமாய் நெஞ்சுக்கூட்டிற்குள் ஒட்டிக்கொள்கிறாய். ஏன் இந்த மாற்றம்? உன்னில் மேலும் நினைவுகள் தொடரும்...


----------------------------------------நினைவுகள் தொடரும்------------------
                                                    அன்புடன் லதாசரவணன்.



நான் உன் தோற்றத்தில் மயங்கவில்லை, ஏதோவொரு உணர்வு, உனைக் காணும் நேரம் இமையென்னும் மாளிகைக்குள் புகுந்து விழிப்படுக்கையில் வீழ்த்திவிடுகிறாய்! உன் மாற்றம் திகைக்க வைக்கிறது, தேனில் ஊறிய பலாச்சுளையாய் இனிக்கிறது. போதையேறிய பார்வையில் பூக்கிறேன் தினமும்!

உன் வருகைக்காய் என் வாசல் ஏங்குகிறது... பனிமலராய் நான்! பார்வையால் நனைத்தாய், அழைத்தேன். வந்ததும் ஆசைதீர விழிகளாலே பருகினாய்! மெளனத்திற்குத்தான் எத்தனை சக்தி ! உதடுகளைப் பிரிக்காமல் உன் கண்களின் மொழி! தயக்கம் ஏன்? உன் சொற்களைக் கேட்கவே நான் காத்திருக்கிறேன் இதழ்களின் பூட்டை விலக்கலாமே ! பரிசென நான் அளித்ததை வாங்காமல் எனையே பார்த்ததேன்? பேசத் துடித்த உதடுகள், தாகம் நிறைந்த கண்கள், ஏக்கம் வழிந்த உன் பார்வை- இவையெல்லாம் சந்தித்த பிறகு என் சிந்தனையே மறந்து போனதேன்?

நீ விழிகளால் உறவாடியது சில மணித்துளிகள்தான். ஆனால், பல்லாயிரம் தருணங்களில் அதை நினைக்க வைத்துவிட்டாயே! எங்கு திரும்பினாலும் நீயே இருப்பதாய் ஒரு நினைவு... உறங்கிட முயன்றால் இமைகளுக்கு நடுவில் வந்து நிற்கிறாய்! ஏக்கம் பொழிந்த பார்வை, தயங்கிய நடை, ஏனிது? நான் உன்னவள் இல்லையா? நான் கேட்டு ரசித்த அனைத்து வரிகளும் உனைப் பார்த்ததும் மெய்யாய்ப் போனதாய் உணர்வு! உனைக் கடந்து போகும் போதெல்லாம் ஏதாவது பேசவேண்டும் என்று மனம் ஏங்கும். ஆனால், விழிகளில் நுழைந்து இதயத்தைத் துளைக்கும் அந்தப் பார்வையில் சகலமும் மறந்துவிடும்.

விநாடிகளைக்கூட கடக்கச் சிரமப்படுகிறேன். என் ரசனைகள் அனைத்தும் உன்னில் காண்கிறேன். என் விரல்களை அணைத்த உன் விரல்கள் உறவாடியபோது மென்மையாய், பூப்போல என் விரல்களைத் தொட்டு உன் உதடுகளுக்கு அருகில் நீ எடுத்துச்செல்ல, இதென்ன உணர்வு, உன் தொடுதலில் இத்தனை இதமா? உனைச் சந்திக்க இயலாமல் தரை தாழ்ந்தன விழிகள். மொத்த சக்தியும் வடிந்து போனாற்போல் தளர்ந்தது உடல். வெட்கம் நெட்டித்தள்ள மனமின்றி பிரித்தேன் என் விரல்களை உன்னிடமிருந்து!

ஏக்கமாய் வேண்டுமென்பதைப்போல் உன் விரல் நீண்டுவர, போதுமென்ற என் கெஞ்சலில் பிரிந்தாய், மனமின்றி திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே! நாட்கள் சில ஆனாலும், நினைவுகள் மட்டும் நெஞ்சில் பசுமையாய்! என்னையும் அறியாமல் நான் உன்னில் விழுந்துவிட்டேன். உன் அணைப்பிற்கும், அண்மைக்கும், முத்தத்திற்கும் ஏங்குகிறது என் மனம்! நீ மறுபடியும் எனை விட்டுப் பிரிந்துவிடுவாயோ என்று தவிக்கிறது இதயம்!

ஒரே நினைவுத் தூறலில் நனைகிறோம் நாம், ரசனைகள் மட்டுமல்ல ரகசியங்களும் ஒத்திருக்கின்றன - உனக்கும் எனக்கும்! உன் வருகையை எதிர்பார்த்தேன் அதிகாலையிலேயே! ஏனோ நெஞ்சிற்குள் இனம்புரியா குறுகுறுப்பு. வருகிறேன் என்று நீ உறுதியளிக்கும் வரையில் படபடத்த இதயம் தலையசைப்பில் பட்டுச் சிறகை விரித்துக்கொண்டது. வரப்போகும் அந்தச் சில மணித்துளிகளுக்காகவே காத்திருக்கிறேன், கடக்கிறேன் நிமிடங்களை!

வந்தாய் விழிக்கூண்டிற்குள் எனைச் சிறைப்பிடித்து விட்டாய்... பதைபதைக்க பார்வை வலை விரித்தாய் விழுந்துவிட்டேன் அதில். இருளும் ஒளியும் இணைந்திருந்த நேரம் வானவீதியில் வெண்பளிங்கு மேகத்தில் நீயும் நானும் சஞ்சரிக்கிறோம்! உனை நேரில் காணாநேரம் ஆயிரம் வார்த்தைகளை உச்சரிக்கும் இந்த உதடுகள் நீ அருகில் இருக்கும்நேரம் அரைவார்த்தை பேசக்கூடத் தயங்குகிறது. எதையோ கேட்க எண்ணி அருகில் வந்தேன். விநாடிக்கும் குறைவான நேரத்தில் என் கரங்களைப் பற்றினாய். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போலொரு உணர்வு. இடை பற்றி இழுத்தணைத்து நெஞ்சின் சூடுறைத்த நேரம்... என் இதழ்களை நோக்கி நீ குனிய, பதறிப்போய் நான் விலக, விரல்களால் உடலில் ஏதோ தேடினாய்! உன் துணிவு கண்டு எனக்குள் வியப்பு! விலகி நின்றேன். தலைசாய்த்துப் பார்த்து கரம் நீட்டினாய். உன்னிடம் போகத்துடித்த நீட்டிய கரங்களைப் பற்றத் துடித்த என் இரு கைகளையும் கட்டிக்கொண்டேன்.

சிறு மெளனப்போராட்டம் நம்மிடையே! குனிந்திருந்த முகத்தை விரல்கொண்டு நிமிர்த்தினாய். அடுத்த நொடியில் உன் பிடியில் நான்! என் கைகள் உன்னில் பாதுகாப்பாய். எப்படி அவை உனைச் சேர்ந்தன? நீ உறுதியானவன் என அறிவேன். ஆனால், உன் அணைப்பிலும் தொடுதலிலும் அத்தனை மென்மை. மேகம் தொடுவது போல், குழந்தையை வலிக்காமல் பற்றுவது போல், கனவுலகத்தில் இருப்பது போல் பிரமையெனக்கு.

ஏதோவொரு மயக்கம் எனை ஆட்கொண்டுவிட்டது. மறந்தேன் சகலமும். இந்த அணைப்பிற்காகவே ஏங்கியது மனம். அகப்பட்டுவிட்டேன் அதில்! நான் நினைத்தது நிகழ்ந்தேவிட்டது. உன் இனிய முத்தம் வேகமாய் வந்தடைந்த இதழ்களால், என் இதழ்களை நனைத்துவிட்டுப் பிரிந்தது. அப்பிரிவு தாளாமல் மீண்டும் இணைந்தாய்! மனதினுள் மீண்டும் மகிழ்ச்சிப்பூக்கள்.

வெட்கம் தாளாமல் உனைத் தள்ளிவிட்டு விலகினேன். நான் நேசித்த விழிகள் கொஞ்சின. வா....என்னும் ஒற்றைச்சொல் காற்றாய் மிதந்து போதையோடு வர, மறுப்பெனத் தலையசைத்தாலும், என் கால்கள் தன்னிச்சையாய் நகர்ந்தன உன்னிடம். மீண்டும் உன் அணைப்பில் கட்டுண்டேன். இதழ்களால் இதயத்தைக் குடித்தாய்! எனை வெட்கம் பிடுங்கித்தின்றது. உன் பின்னால் நின்றுகொள்ள... அந்த நெடிய கரங்கள் நீண்டு பின்புறமாய் அணைத்துக்கொண்டன. சென்று பின் திரும்பிவந்தாய். மீண்டும் இடையைப் பற்றி அணைத்துக்கொண்டாய். இது பிரிவை உணர்த்திய அணைப்பு. உன் உதடுகள், முகத்திலும் தோள்களிலும் கழுத்திலும் ஒரு முழு நிமிட அணைப்பிற்குப் பின் எனை விட்டுப் பிரிந்தாய். சென்று மறைந்தாய்!

உன் விழிகளின் அணைப்பில் மிதந்தவளை விரல்களின் அணைப்பில் மூழ்கிடச் செய்தாய்! இனி எழுவது கடினம். நான் உன்னில் முழுமையாய் விழுந்துவிட்டேன். உன் ஒரு நொடி பிரிவினையைக்கூட ஏற்க முடியாது. அன்பே என் கனவிலும் உன் முகம் தேடுவேன். உனது காதலில் விழுந்துவிட்டேன்! வாழ்வின் ஒவ்வொரு வாசலும் இன்பத்தைத் தருவதில்லை. கடந்துவந்த பாதையின் கசப்பான நினைவுகளை மறக்கத்தான் முயல்கிறேன். விரக்தியும் வேதனையும் மனதைப்போட்டு வதைக்கின்றன.
-------------------------------------------------------------------------------
                                                    நினைவுகள் தொடரும்.


உன் மனதை ஆயிரம் மூடிகள் போட்டு நீ மறைத்தாலும், விழிகள் உண்மையைக் காட்டிக் கொடுத்து விடுகிறதே! இமைக்க மறந்த தருணங்கள்! புரிபடாத பார்வைகள் பல நேரம்! காரணம் புரியாமல் தவிக்கிறேன்! அன்றைய தினம் சந்திக்க பயம் கொண்டு, யோசித்தபடி அங்கு இருந்தேன்.

மனதில் ஒரு சிறு நினைப்பு, - நீ வருவாய் என- என் நினைவை நிஜமாக்கிட நீயும் வந்தாய். உள்ளுக்குள் இன்பஊற்று. மெல்லிய பரவசம், தவிப்பாய் உணர்ந்தேன் தருணங்களை. நீயும் பார்வையை வீசினாய், பேசினாய், உள்ளுக்குள் எழுந்துவிட்ட புன்னகையை அடக்கச் சிரமப்பட்டு தலையை அசைத்தேன். நீ போனபின், அதை எண்ணியெண்ணிச் சிரித்தேன். இந்த மாலை வேளையில் உனைக் காணாமல் தவித்தேன். ஒரே விநாடியில் நீ வந்தாய். பசித்திருந்த கண்களுக்கு விருந்தாய்!

வீசிவிட்டுப் போகும் புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கிறதே! மறக்கமுயன்று தோற்றுப்போனதே என் இதயம். முதுகிற்குப் பின்னால் துளைத்தெடுத்த பார்வையில் வாசலில் நின்று வாடிய முகம்தனில் உன் வருகையின் காரணங்கள்… வந்தாய், அழைத்தாய் அதிகாரபூர்வமாய் மெல்லிய உரசல்... ஒரு விநாடி எனினும் மனதினுள் ஆயிரம் நேசத்தை விதைத்தது. உன் விழிகள் என்னிடம் ஏதோ சொல்லுகிறது. அது என்ன உணர்வு? இரவுகளின் தொடக்கத்தில் தனிமையின் பிடிப்பில், போர்வையாய் உன் நினைவுகள்!

என் ஆறறிவிற்குள் நீ அடங்க மறுக்கிறாய்! உனைப் புரிந்துகொள்ள இயலாமல் தவிக்கிறேன் நான்...விரும்பினாய் விழிப்பார்வையால்! விலகிடவே நினைத்தேன் முடியவில்லை, மாட்டிக்கொண்டேன் உன்னில்! பார்வையால் நனைத்தாய்! வார்த்தையால் துவட்டினாய்! பிறகு திடீரென்று உன் மெளனம், பாராமுகம்! ஏன்?

மெளனமான பார்வை, மனதைக் கவரும் சிரிப்பு, தாலாட்டாய் உன் மென்குரல், மறைந்திருந்து பார்த்தாய், எதிர்பாராமல் விழிகளுக்கு முன் வந்து திகைக்க வைத்தாய். பின் பேச மறுத்தாய்? எனைக் கண்டாலே ஒதுக்கினாய், தவித்தேன், துடித்தேன்.

நீ முகம் திருப்பும் நேரமெல்லாம் இறந்துப் பிறந்தேன். தவிப்போடு உனைக் கடந்து போகும் நேரங்களில் வலுக்கட்டாயமாய் என் புறம் திரும்பாமல் இருப்பாய். இருளைப் போர்த்திக் கொண்டு ஒளியில் மறைந்தாய்! ஆனால், மறுபடியும் திடீரென்று உன்னிடம் மாற்றம். இதற்கென்ன காரணம், முன்பைவிடவும் கூர்மையாய் நேராய் எனை நோக்குகிறாய். இமைகளை வருடும் உன் பார்வையைச் சந்திக்கும் நேரம் புன்னகையைக் கூட மறந்து விடுகிறேன் நான்! விரல்களை உரசுகிறாய், ஒருமுறையெனின் பதட்டம் என்று எடுத்துக்கொள்வேன். ஆனால், பலமுறை விரல்களை வருடும் அந்த மென்மையான வருடலில் உடல் சிலிர்க்கிறது.

நீ பேசாதிருந்ததைவிட இப்போதே இன்ப அவஸ்தையாய்! எங்கிருக்கிறாய்? நான் தவிக்கிறேன் உனைப் புரிந்துகொள்ள முடியாதபடி! ஏன் எனக்கிந்த அவஸ்தை? நான் உன் தோற்றத்தில் மயங்கவில்லை, ஏதோவொரு உணர்வு, உனைக் காணும் நேரம் இமையென்னும் மாளிகைக்குள் புகுந்து விழிப்படுக்கையில் வீழ்த்திவிடுகிறாய்! உன் மாற்றம் திகைக்க வைக்கிறது, தேனில் ஊறிய பலாச்சுளையாய் இனிக்கிறது. போதையேறிய பார்வையில் பூக்கிறேன் தினமும்!
-------------------------------------------------------------------------------
                                                    நினைவுகள் தொடரும்.
Powered By Blogger
Powered by Blogger.