08 April 2012

ஒதுக்கல்

சுந்தரேசன் அன்று காலையில் தான் தன் முதல் உதயத்தை சென்னையில் தன் கூரை வீட்டில் பார்க்கிறார். எத்தனை தினங்கள் ஆகிறது, சொந்த ஊரில் சுதந்திரந்தமாய் சுற்றித் திரிந்த காலங்கள் போய் பணம் என்னும் ஒன்றிற்காக நாடு கடந்து அங்கேயே பல உதயங்களைக் கண்டபோது இல்லாத ஒரு புத்துணர்ச்சி இப்போது தன் உறவுகள் வாழும் மண்ணில் காணும் போது எத்தனை இன்பமும், அமைதியும் மனதிற்கு கிடைக்கிறது. 20 ஆண்டுகள், இராமருக்கு கூட 14 வருடங்கள் தான் ஆனால் தன்போன்ற வறுமையில் உறவுகளைத் துறந்து நாடுகள் கடந்து பணிபுரிபவர்களுக்கு எந்நாளும் வனவாசங்கள் தான்.

வாசலில் பேப்பர் போடும் சப்தம் கேட்டது, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பேப்பரைக் கையிலெடுத்தார். மனைவி வசுமதி குளித்து முழுகி, மங்கலமாய் பொட்டிட்டு காபி தபராவை நீட்டினார்.

சுந்தரேசன் மனைவியைப் பார்த்தார். வசுமதி உனக்கு ஒண்ணும் அத்தனை வயசாயிடலை, இப்பக் கூட எத்தனை அழகா இருக்கே தெரியுமா?

ஏது நரை கூடிய பிறகுமா?

அந்த நரை தாண்டி உனக்கு அழகே?

நல்லாயிருக்கு பிள்ளையில்லாத வீட்டுலே கிழவன் துள்ளி விளையாடிய கதையா,,, காலம் போன கடைசியிலே கிருஷ்ணா ராமான்னு இராம இதென்ன லவ் டயலாக் அடிச்சிக்கிட்டு, புன்னகைத்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் வசுமதி.

காலம் போன கடைசியிலா அப்படியென்ன வயதாகிவிட்டது எனக்கு ? 56 வயதெல்லாம் ஒரு வயதா? காலையில் ஷேவ் பண்ணும் போது தலையில் நிறைய வெள்ளை முடிகள் தோன்றி இருந்தது நினைவிற்கு வந்தது. வசுமதி சொன்னதைப் போல் இதையெல்லாம் நான் காலம் கடந்து தான் செய்கிறேனா,,,,? என்று மனதில் கேள்வி எழுந்தது.

இதே வசுமதி திருமணமான புதிதில் இப்படி காபி கொண்டு வந்து தரும்போது இழுத்து அணைத்து மடியில் கிடத்திக் கொண்டதையும், அம்மாவின் குரல் கேட்டு அய்யோ அத்தை கூப்பிடறாங்க, விடுங்க என்று அவள் என் கைகளில் இருந்து விடுபடத் தவிப்பதையும் நினைத்துப் பார்த்தது மனது. ம்...அது ஒரு காலம். சில நிகழ்வுகள் அசைபோடும் போதும் எத்தனை இன்பமாய் உள்ளது. அப்படி தினம் தினம் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கையை விடுத்து கடல் கடந்து சென்றதால் இன்று இழந்தைவைகள் அநேகம் அல்லவா. இனியென்ன முயன்றாலும் என் இளமைக்காலம் திரும்பி வராதே? என்று சிந்தனையிலேயே காலையில் டிபனை சுவைத்தார். இட்லி கொத்துமல்லிச் சட்னியோடு, வெங்காயப் பக்கோடாவும் வசுவின் கைவண்ணம். எத்தனை மணம்

என்னங்க சாப்பிடாம என்ன யோசனை?

ஒண்ணும் இல்லை வசு,! அங்கேயெல்லாம் டிபன்ங்கிறே பேர்லே தருவான் பாரு இதே இட்லிதான் ஆனா கல்லு மாதிரி இருக்கும். ஆயிரந்தான் சொல்லு உன் கைப்பக்குவம் அருமை தான். ஏய்,,,, இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கண் கலங்குறே.?

உழைக்கிறேன்னு இப்படி சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்டு வந்திருக்கீங்க? நான் நல்லா சமைச்சு என்ன புண்ணியம், இத்தனை காலத்திலே உங்களுக்கு என் கையால பரிமாறிட முடியலையே? மனைவியின் ஆதங்கத்திற்கு தலையாட்டிட முடிந்ததே தவிர வேறெதுவும் பேசிட தோன்றவில்லை, ஏனோ மனம் கனத்தது.

அம்மா எங்க காலேஜ்ஜில கல்சுரல் ஆரம்பிக்கிறது, நான் கூட ஏதாவது நிகழ்ச்சியில் கலந்துக்கலாமான்னு யோசிக்கிறேன். என்னம்மா கலந்துக்கிறது, நீ தான் நல்லா ஐடியா தருவியே? என்று மகள் காலைக் கட்டிக் கொண்டாள்.

உனக்குத்தான் பாட்டு நல்லா வருமே? பாடு கீதாகுட்டி

எப்படிம்மா, அத்தனை பேர் முன்னாலேேயும் எல்லாமே வாலுங்க, கொஞ்சம் சுருதி பிசகினாலும் அவ்வளவுதான். நான் காலி,,,

பயப்பட்டா எப்படிடா இதுக்கா உனக்கு கஷ்டப்பட்டு பாட்டு கத்துக் கொடுத்தது, நீயும் எத்தனை ஆர்வமா கத்துக்கிட்டே உன்னால முடியும் டா இப்படிப்பட்ட மேடைகள் தான் உன்னை இன்னும் உயரத்திற்கு கொண்டு போகும். முடியாதுன்னு சொல்லாம ஒப்புக்கிட்டு அதுக்கு ஏத்தாமாதிரி பயிற்சிகளை செய்... அம்மாவின் வழிகாட்டலில் மகிழ்ந்து முத்தமிட்டு சென்றாள் மகள்.

வர்றேம்மா,,,, வர்றேப்பா....?!

மகன் கவின் ஐ.டி துறையில் வேலை செய்கிறான். நல்ல சம்பளம் தான் இன்னும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கக் கிடைக்க மேற்கொண்டு நல்ல சம்பளமும் உண்டு. இரவு முழுக்க வேலை செய்துவிட்டு பகலில் சில நேரம் தூங்குவான். ஆள் தான் வளர்ந்து விட்டானே தவிர, ஒவ்வொரு வேலைக்கும் அம்மா வேண்டும்.

அம்மா நம்ம குருவுக்கு இன்று கல்யாணம், என்னை நைட்டே வரச்சொல்றாங்க. போகட்டுமா?

போயிட்டு வாடா....

சுந்தரேசன் பேசினார். என்ன வசு, நைட் சின்னபசங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியாதா? இவனும்...

கவின் அப்படியெல்லாம் இல்லை என்னைக் கேட்காம சின்ன காயைக் கூட நகர்த்தத மாட்டான். ஆனா அதுவும் தவறுங்க இப்போ எல்லாத்துக்கும் என்னையே எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால், நாளைக்கு பொண்டாட்டி வந்திட்டா அவளைத் தேட மாட்டான். அம்மாவின் ஆசைன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி சுயமா முடிவெடுக்கறதைத் தள்ளிப் போடுவான். நம்ம பிள்ளைக்கு சொத்தை விடவும் சுயம் முக்கியம் இல்லையாங்க.... போயிட்டு வரட்டும், நல்லது கெட்டதுன்னு நாலையும் கத்துக்கிட்டாத்தான் அவனும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவான்.

மகனும், மகளும் கிளம்பி விட்டனர். நாம் பெற்ற பிள்ளைகள் ஆனால், அதுங்களின் குணமோ, அவர்களுக்கு எதில் ஆர்வம் அதிகம், எது பிடிக்காது என்று எதுவும் தெரியாது, ஒரு பொம்மைக்கு முத்தமிட்டு செல்வதைப் போல அப்பா போயிட்டுவரேன்னு சொல்லிட்டு போவதைப் போல் இருந்தது சுந்தரேசனுக்கு. அங்கே எல்லாமுமாக வசுமதியே நின்றிருந்தாள். இது யார் தவறு,,,,,?!மனம் அடைந்திட்ட வெறுமையைப் போக்க வசுமதி நான் நம்ம மேலத்தெரு நடேசன் வீடுவரை போயிட்டு வர்றேன் என்று காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்பினார், சூரியன் சுள்ளென்னு நெற்றியில் அரைவது போல் தன் வெப்பத்தை பூமியின் மேல் இறக்கினான்.

நடேசன் நண்பனைக் கண்டதும் அன்போடு வரவேற்றார். டேய் எப்படிடா இருக்கே? பார்த்து எத்தனை வருஷமாச்சு ! உன்னைப் பார்க்கணுமின்னு தங்கச்சிக் கிட்டே கேட்டுகிட்டே இருந்தேன். பத்மா காபி கொடும்மா..

வாங்கண்ணா நல்லாயிருக்கீங்களா? வசுமதியைக் கூட்டி வந்திருக்கக் கூடாது?

இருக்கேம்மா,,,,வருவாம்மா இப்போ கொஞ்சம் வீட்டில் வேலையிருக்கு? உன் பையன் எங்கேடா?

அவன் இப்போதான் பளஸ் டூ முடித்திருக்கிறான். 96 பர்சன்ட்டேஜ் என்ன கோர்ஸ் எடுக்கலான்னு கேட்டு துளைத்திட்டான். ஆடிட்டிங் போடச் சொல்லியிருக்கிறேன். அதே நேரம் நடேசனின் மகன் வந்தான்.

அப்பா நீங்க சொன்னா மாதிரியே ஆடிட்டிங் போடப்போறேன்.

பாருடா இவனை படிக்கப் போறவன் இவன் உனக்கு எது முடியுமோ அதை படிடா என்றால், என்னைத் துளைக்கிறான்.

அங்கிள் நான் பிறந்ததில் இருந்து எனக்காக பார்த்துப் பார்த்து எது சரி எது தவறுன்னு செய்யறது அப்பாதான். என்னுடைய விருப்பு வெறுப்பு பலகீனம், பலம் எல்லாமே என்னை விட அவருக்குத்தான் நல்லாத் தெரியும். அதனால என்னுடைய எதிர்காலத்தை நிர்மாணிக்கிற பொறுப்பையும் அப்பாகிட்டேயே விட்டுட்டேன். இது தப்பா?!

இல்லை என்பதைப் போல் ஆமோதித்தார். சுந்தரேசன். நடேசனின் பிள்ளை அவனிடம் எத்தனை அன்னியோன்யமாய் இருக்கிறான் என்று மனம் சந்தோஷப்பட்டாலும் ஒரு மூலையில் இந்த சின்ன முத்தத்தைக் கூட நாம் இழந்து விட்டோமோ தன் பிள்ளைகளிடமிருந்து என்றும் தோன்றியது, கீதாவும், கவினும் தாயை இறுக அணைத்தபடி முத்தமிட்டது நினைவில் ஆடியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் இருவரும் தனியாய் தோட்டத்தில் அமர்ந்து பேசிடத் தொடங்கினர்.

ஏண்டா எத்தனைபேர் அப்பப்போ லீவுலே வந்து போறாங்க, அப்படி கூட நீ சரியா வரலையே ஏண்டா?

என் குடும்ப நிலைமைதான் உனக்கே தெரியுமே? நாலு அக்கா அப்பா திடுமென தவறிட்டாதாலே பாதியிலேயே என்னோட படிப்பும் நின்னுபோச்சு, இரண்டு அக்காக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகியிருந்தது, ஒருத்திக்கு நிச்சயம் செய்தாச்சு, தம்பியோட படிப்பு, கடன்னு கழுத்தை நெரிச்சவன்தான் அதிகம் என்ன செய்யறது? என் பொண்டாட்டியும் எல்லா நகைகளையும் கழட்டி தந்திட்டா, வேற வழியில்லை, கல்யாணமான இரண்டு மூணு வருஷத்திற்குள்ளாகவே நான் வெளிநாடு போக வேண்டியதாகப் போயிடுச்சு. லீவுலே வந்தாலும் கட்டின பொண்டாட்டி கிட்டே கூட சகஜமா பேசமுடியலை,

எதுவும் நிரந்திரம் இல்லைன்னு மனசுகுள்ளே ஒரு பட்சி சொல்லிட்டே இருக்கும். யோசிச்சுப் பாரு, அன்பும், அன்னியோன்யமும் மனசுக்குள்ளே நிரம்பி வழிந்தாலும் அதை வெளிப்படுத்திட முடியாத சூழ்நிலை, ஒரு கட்டத்திலே குடும்பச் சுமைகள் கொஞ்சமா குறைந்து போச்சு, ஆனா மனசில ஒரு இடைவெளி விட்டது. இதோ இப்போ கூட உன் வீட்டுலே இருக்கிறா போல ஒரு நிறைவு ஒட்டுதல் இல்லைடா...

என்னடா சொல்றே? சுந்தரேசா, அண்ணி எத்தனை கட்டுக் கோப்பா குடித்தனம் நடத்தினாங்க...இன்னைக்கு இந்த ஊரிலே உன் குடும்பத்துக்குன்னு ஒரு தனி அந்தஸ்த்து இருக்கின்னா நீ கஷ்டப்பட்டு பணம் அனுப்பினதிலும் அண்ணி அதை நல்ல முறையில் செலவிட்டு, உன்னுடைய அக்கா தங்கைகளுக்குன்னு நல்லது கெட்டது செய்ததும்தான். இதைவிடவும், உன் பொண்ணு படிக்கிறா பிள்ளை கைநிறைய சம்பாதிக்கிறான். அவன் சம்பாத்தியமே போதுமே உங்க இரண்டு பேருக்கு! குடும்பம் நிறைந்திருக்கிறது. இதைவிட ஒரு தகப்பனா, குடும்பத்தலைவனா உனக்கு என்னடா வேண்டும்.

அது நாளைக்குடா,,,,! பொதுவாக ஆண்கள் தொழில் வேலைன்னு பொழுதன்னைக்கும் வெளியே போயிடுவாங்க. அதனால குழந்தைகள் அம்மாகிட்டேதான் அதிகமா ஒட்டும் ஆனா, என்னை மாதிரியான ஆட்கள் இந்த சொந்தங்களை எல்லாம் தொலைச்சிட்டு, வெளியூர் போயி வரும் போது அப்பாங்கிற அடைமொழியைத் தவிர வேற எந்த ஒட்டுறவும் இல்லை நடேசா... நான் காலையிலே இருந்து உன் வீட்டுலே பார்த்தேன். உன் பிள்ளைங்க எத்தனை அன்போடு நடந்த விஷயத்தை பகிர்ந்துகிறாங்க. அவங்க தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனா என் வீட்டுலே நான் வந்து முழுதாய் ஒரு நாள் ஆச்சு, என் பிள்ளைகள் எல்லாத் தேவைகளுக்கும் வசுமதியைத் தான் தேடுறாங்க. அதுக்காக அப்பாங்கிற என் மேல் அன்பு இல்லைன்னு நான் சொல்லலை, பணம் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் தான் எங்களுக்குள்ளே ஒட்டுதல் இருக்கு, ஆனா, தன் தாயிடம் அவங்க இயல்பா பேசறதையும், சண்டைபோடுறதையும், விளையாட்டு செய்யறதையும் பார்க்கும் போது இலேசா ஒரு பொறாமையே வருதுடா? என்பிள்ளைகள் என்னையே ஒரு விருந்தாளி மாதிரி நினைக்கக் காரணம், அதுங்களோட மனசில ஒரு ஒதுக்கல் வர காரணம் புரியும் போது என் இயலாமையை நினைத்து மனசு வலிக்குது.

நடேசன் ஏதும் பேசத் தோன்றாமல் நண்பனையே பார்த்தார். விதிவசம் பணம் தேடி ஊர் ஊராக அலைஞ்சு இன்னைக்கு என் குடும்பம் ஒண்ணா நிற்கிறது. ஆனா நான் தாமரை இலைத் தண்ணீரா அதில் மிதக்கிறேன். இனிமே அந்த ஒட்டுதல் கிடைக்குமின்னு எனக்கு நம்பிக்கை இல்லை, வசுமதி கூட எனக்கு என்னனென்ன வேணுமா பார்த்து பார்த்து செய்யுறா? அதில் அபரிதமான அன்பு தெரியுது? ஆனா, எனக்கு சராசரியா நான் வேலை ஏவுனா என்னங்க எனக்கே உடம்புக்கு முடியலைன்னு ஒரு அவசர பதில் வரணும். உங்கப்பாவுக்கு வேலையே இல்லைன்னு அவ பிள்ளைங்க கிட்ட செல்லமா புலம்பணும். என்கூட சின்ன சின்ன சண்டைகள் போடணும். ஆனா இயல்பு நிலை இல்லாம நம்ம புருஷன் இத்தனை நாள் கஷ்டப்பட்டு வந்திருக்காறேங்கிற, அந்த அனுதாபம் தாண்டா அவ அன்பில் வெளிப்படறா மாதிரி எனக்குத் தோணுது என்றார் சுந்தரேசன்.

நான் வந்தேன் ஏதோ மனசில உள்ளதை பேசிட்டேன். ஆனா இது எதுவும் வசுமதிக்கு தெரியவேண்டாம். மனசு சங்கடப்படுவா....! நாள் பட பிரிந்து வந்தால், உறவுகளின் உண்மையான அன்பும் அக்கறையும் கூட பாரமாத்தான் தெரியுது. என் கூட்டை விட்டு ரொம்ப தூரம் பறந்து போயிட்டேன். இப்போ திரும்பி வந்து, குருவிகள் ஏற்றுக் கொண்டாலும், என்னாலே மட்டும் ஏனோ ஒதுக்கல் இருந்திட்டே இருக்கிறது, என்று கண் கலங்கினார் சுந்தரேசன்.

20வருட வலி இன்று மெல்ல மெல்ல வெளியே வந்து தன் புண்ணிற்கு களிம்பு தேடி கிடைக்காமல் தவிக்கிறது. தேற்ற வழி அறியாமல் அமைதியாய் இருந்தார் நடேசன்

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.